Monday, September 16, 2024

விழிப்புணர்வு ...

2.  விழிப்புணர்வு...

1. விழித்தெழு  மீனவனே ...

கடலைமட்டும் நம்பி வாழ்ந்தோம் 

வாழ்வில் கரை இன்னும் சேரவில்லை 

பள்ளிக்கூடம் போனதில்லை - பட்டம் 

பதவிகளும் பெற்றதில்லை . 

    சேமிப்பு செய்ததில்லை - அதனால் 

    செல்வங்களும் சேர்ந்ததில்லை 

    கல்வியின்றி செல்வமின்றி -நம்மை 

    மதித்ததில்லை யாரும் இன்றுவரை . 

கடமை மட்டும் செய்துவந்தோம் 

உரிமைகளை மறந்தேவிட்டோம் 

இதுவரைக்கும் தூங்கிவிட்டோம் 

விழித்தெழுவோம் விழிப்புணர்ச்சியுடன் . 

    அரசியலும் பழக்கமில்லை 

    அரசாள துணிந்ததில்லை 

    அடிபணிந்தே வாழ நேர்ந்தோம்  

    தலைநிமிர்ந்து வாழ புறப்படுவோம் . 

ஒன்றுபடுவோம் ஒத்துழைப்போம் 

ஓரினமாய் நின்று செயல்படுவோம்  

பொறுத்ததுபோதும் மீனவனே 

பொங்கியெழு விழிப்புணர்ச்சியுடன் . 

                                        - 25.02.1980


2. மீனவத்தாய்...

பாய் விரித்து படகோட்டி 

வலை போட்டு மீன் பிடித்து 

வருமவரை எதிர்நோக்கி 

ஏங்கி நிற்கும் தாய்க்குலங்கள் .

    களைப்புற்று கடல்கடந்து -பின் 

    கரை வந்து சேர்ந்தோர்க்கு 

    உணவளித்து உபசரித்து 

    உறங்கவைக்கும் உத்தமிகள் . 

கொண்டுவந்த மீன்களையே 

கொணர்ந்திடுவாள் சந்தைக்கு 

தலைச்சுமடாய் தலைதெறிக்க 

ஓடிடுவாள் வழியெல்லாம் . 

                            - 31.08.1979


3. அடிமைத்தனத்தின் ஆணிவேர் 

என்னுடன் பழகும் எவரையுமே நான் 

எந்த முறையிலும் கெடுத்திடமாட்டேன் 

ஏராளமாக நன்மைகள் செய்து 

ஏனையோர் வாழ வழி செய்வேன் . 

    ஏழைகள் எளியவர் என்பவர் இங்கே 

    ஏங்கிடும் காட்சி வாட்டுது நெஞ்சை 

    ஏன் என கேட்க ஏழைக்கு எங்கே 

    எட்டுப்படிப்பும் எழுத்தறிவு ? 

எழுதத்தெரிந்தால் ஏன் என்பான் 

எண்ணத்தெரிந்தால் எது என்பான் 

எதுவும் வேண்டாம் இவர்களுக்கே 

என்பதுதானே அடக்குமுறை . 

                        - 16.09.1979


4. உழைப்பால் உயர்வோம் 

உண்மையிலா உள்ளங்கள் 

உலவிவரும் உலகினிலே 

எண்ணமில்லா ஏழைகளை 

ஏமாற்றும் எத்தர்களை 

என்ன செய்வோம் ? 

ஏது செய்வோம் ? 

    கள்ளமில்லா காளையர்கள் 

    கயவர்களை களைந்திடவே     

    முழுநேர முயற்சியாலே 

    முறியடிக்க முன்வருவோம் . 

நீதிதனை நேர்மைதனை 

நிலைநாட்ட நினைத்திடுவோம் 

உழைப்பால் உயர்வடைவோம் 

உலகினையே உயர்த்திடுவோம் .  

                            14.11.1977


5. மீனவனின் கதி 

பசியுடனே கண் விழித்து 

அலையுடனே போராடி 

கடல் சென்று மீன் இன்றி 

திரும்பிவரும் மீனவர்க்கு 

பலன் கொடுக்க நிலமில்லை 

பசிதீர்க்க வழி இல்லை .


6. பசியும் பணியும் 

ஏழைக்கு வாழ்வில்லை - ஏன் 

இந்த வழக்கம் இங்கே 

பசிப்பவர்க்கு புசிக்க இல்லை 

இருப்பவர்க்கோ பசியில்லை 

    பசிப்பவர்க்கு பணி இல்லை 

    பின் கூலிப் பணம்தான் ஏது!

    பணமின்றி பசி தீர்க்க 

    பாமரர்க்கு புத்தி எங்கே ! 


7. பொருளில்லா (புது)பொருளாதாரம் 

ஆதாரம் பொருளாதாரம் - மனித 

வாழ்வுக்கு பொருள் ஆதாரம் .

பொருளல்லாதது பொய்யாகும் 

பொறிக்கு புலனாவது பொருளென்பதால்.

    பொருளில் பொருளில்லை யென்றால் 

    பொய்யாகும் பொருள் கூட - புது 

    பொருளாதாரத்தில் பொருளில்லை 

    பொய்யெனப் புரிந்து தள்ளிட வேணும் . 

மக்களை மதியா பொருளாதாரம் 

மனிதனை பொருளாக்கும் போதினிலும் 

பொறுத்திருந்தால் பொருளாவோம் 

பொருளில்லை பின் மனிதனுக்கே .

    பொங்கியெழுந்து போராடுவோம் 

    பொருளாதாரத்தை பொசுக்கிடுவோம் 

    பொருளினை அளிக்கும் புது வாழ்வை 

    புத்துலகினுக்கே அழித்திடுவோம் .  

[கருத்தரங்கு - ராஜீவின் புது பொருளாதார கோட்பாடு - பூனே ,  15.02.1987]


8. கவிதை - கற்பனை 

கற்பனையை கருவாக்கி 

காவியமாய் வடித்த வேளை 

கள்ளமில்லா கண்கொண்டு 

கண்டதெல்லாம் உண்மையென்று 

கவிஞனவன் சாற்றும்போது 

காசினியோர் ஏற்பதில்லை . 

வேறு : 

ஊரறிந்த உண்மைகளை 

உருக்கமாக எடுத்துரைக்க 

கற்பனையும் கலந்திங்கே 

காவியமாய் வடித்தாயே 

காவியத்தில் கள்ளமில்லை 

கருத்தினில் கபடில்லை

கண்டமனம் கரையவில்லை 

கல்நெஞ்சாய் போனதாலோ!


9. பட்டங்கள் பெற்றதொன்றும் பலனளிக்கவில்லை 

பலவருடம் காத்திருந்தும் பதவியொன்றுமில்லை 

பார்ப்பவர்க்கு பரிதாபம் பழகுவோர்க்கு பரிகாசம் 

பாதகந்தான் ஏது செய்தோம், பதிலளிப்பீர் பாவலரே . 

    வேலைவேண்டி வெளியுலகம் சென்று வந்தோம் 

    வேண்டாத விபரீதம் பெற்று வந்தோம் 

    விரக்தியுடன் வீணர்களாய் வீடு வந்தோம் 

    வித்யாசமான வழி முயன்று வந்தோம் . 

முயற்சி திருவினையாகக் கண்டோம் 

முறையது சுயவேலை என உணர்ந்தோம் 

முறையற்ற வழியெதுவும் வேண்டாமென்றோம் 

முத்தான கருத்தாக 'மக்கள் பேரங்காடி'  கண்டோம் . 

    தொண்டு செய்யும் பண்பெல்லாம் மறைந்து வர 

    தொழிலாக தொண்டினையே பலர் காண 

    தொண்டினையே தொழிலாகும் பட்டதாரி பலர் 

    தொடங்கும் இம்முயற்சியினை வாழ்த்திடுவீர் . 

                                             தூத்தூர் 26.10.1991

 


No comments:

Post a Comment

John Rose’ Birthday – 01.07.2024 and Selva Rani...

 John Rose’ Birthday – 01.07.2024 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,  ஜாண்றோஸ் ! இன்றுபோல் என்றும் மன நிறைவோடு , உடல்-உள்ள நலத்தோடு வாழ்க , ...