மனிதருள் மாபரன் மகிழ்ந்திடும் வேளை
மாற்றான் வந்து மயங்கிடச் செய்தான்
மயங்கிய மனிதன் மாண்டிடும் விதமாய்
மாற்றியே சென்றான் மானிடம் முழுதும்
மாற்றப்பட்ட மனுக்குலம் முறையாய்
மரணம் ஏற்பது மன்னவன் காண
மனமது உடைந்து மரணம் வெல்ல
மன்னவன் தாமே மண்ணிடை வந்தார் .
இழந்துவிட்ட இறையரசு ஈங்கிதோ
இயம்பியே வந்தார் இறைமகன் இயேசு
இருக்கும் இதயம் இதற்கு இணங்கா
இன்னொரு இதயம் இன்றேல் இயலா.
அவ்வித இதயம் அளிப்பவர் ஆவி
அழிவோ அதனை அணுகவும் செய்யா
அதற்கென நீங்கள் அகமதை அழித்து
ஆண்டவர் முன்னே அர்ப்பணம் ஆக .
[குரிசுமலை - 04.10.1990]
ஒளியாம் இறையே வாராய்
எளியோர் இதயம் சேராய்
நலிவோர் நலனை பாராய்
பணிவோர் உயர்வை தாராய்.
இறையருளும் வான்பொழிவும்
தாழ்நிலையில் தங்கும்
தேவதாயின் கீர்த்தனமும் - இத்
தத்துவத்தை தாங்கும் .
எளியவரின் குரல் கேட்டு
எகிப்து நாட்டை தாக்கியவன்
ஏழைகளின் குரல் கேட்டு
இரங்காமல் இருப்பானா?
பாலைவனப் பாதையிலே
சோலையாக சென்ற அவன்
இரவினில் ஒளி தீபமாக
இருள் நீக்கி நின்ற அவன்.
பசித்த வேளை புசிக்க தந்து
தாகத்துக்கு தண்ணீர் தந்து
வாக்களித்த நாட்டினிலே
வரவழைத்த வள்ளலவன் .
வறுமையிலும் பொறுமை காட்டும்
வான் தந்தை பிள்ளைகளை
வகையின்றி வாடவைக்கும்
வன்மையரை வீழச்செய்வான் .
எகிப்து நாட்டு பரவோ போல்
எங்கள் நாட்டு பணக்காரர்
ஏழைகளை பிழிந்து வாழும்
ஏற்பாடு என்று போகும்?
விடுதல் சேதி கொண்டுவந்த
விக்கிப்பேசும் மோயீசன்
அவன் துணையாம் ஆரோனும்
அரசன்தனை அடங்க வைத்தார் .
இன்றும் அந்த இறைச்செயல்கள்
இறந்து வாழும் மக்களுக்காய்
இறங்கிவந்து செயலாற்றி
இறையரசு நிலை நாட்டும் .
[குரிசுமலை -15.10.1990]
நீயும் நானும் இரண்டல்ல
நானும் அவனும் இரண்டல்ல
நானும் அகிலமும் இரண்டல்ல
நானும் இறைவனும் இரண்டல்ல .
இறைவனும் அகிலமும் இரண்டல்ல
இருளும் ஒளியும் இரண்டல்ல
இன்பமும் துன்பமும் இரண்டல்ல
இறப்பும் பிறப்பும் இரண்டல்ல .
அணுவும் அகிலமும் இரண்டல்ல
நீரும் நெருப்பும் இரண்டல்ல
நிலமும் நீரும் இரண்டல்ல
விண்ணும் மண்ணும் இரண்டல்ல .
உயிரும் உடலும் இரண்டல்ல
உறவும் பிரிவும் இரண்டல்ல
விருப்பும் வெறுப்பும் இரண்டல்ல
பெருமையும் சிறுமையும் இரண்டல்ல
அமைதியும் அரவமும் இரண்டல்ல
அழகும் அசிங்கமும் இரண்டல்ல
காயும் கனியும் இரண்டல்ல
தாயும் சேயும் இரண்டல்ல .
'நானும் தந்தையும் இரண்டல்ல '
நன்றே சொன்னார் நாயகன் இயேசு
அன்றே வென்றார் கடவுள்தன்மை
இன்றே அவரை வணங்கிடுவோம் .
[குரிசுமலை - 16.10.1990.]
உள்ளதெல்லாம் உண்மையானது
உள்ளத்தின் தன்மையும் உண்மையானது
உலக வழக்கில் இரண்டறக் கலந்தது
உண்மையானதும் உண்மையல்லாததும் .
பாலிற் கலந்த நீரை மாற்றி
பாலை மட்டும் பருகும் அன்னம்
உலக வழக்கில் பொய்மை மாற்றி
உணமையடைய உயர் தவம் வேண்டும் .
உண்மையின்றி அமைதியடையா
உள்ளம் உயர்வும் அடையா
அன்னம் போன்றொரு அரிய திறமதை
அடைந்தால் பெறலாம் அரிய உண்மையை .
அமைதி அழிப்பது உண்மை - அதை
அடைவது மனிதனின் பெருமை
'விடுதலை அளிப்பது உண்மை ' - வான்
வீட்டைத் தருவதும் உண்மை .
உண்மையறிந்து உயர்நிலை அடைந்திட
உத்தமர் இயேசுவின் 'வார்த்தையில் நிலைத்திடு '
வாழ்வும் வழியும் வாய்மையுமானவர்
வாழ்வைத்தந்து வானகம் சேர்ப்பார் .
[யோவான் 8:31-32/ குரிசுமலை 17.10.1990]
No comments:
Post a Comment