Monday, September 16, 2024

குருத்துவத் தவிப்பு . ..

 குருத்துவத் தவிப்பு...

மலர்வேன் நான் ஒரு குருவாக 

மகிழ்வேன் அதன் அருட்பெருக்காலே 

உடலெடுப்பேன் பலிப் பொருளாக 

அளிப்பேன் அதையே பலியாக.

    கிறிஸ்துவின் சீடனும் குருவேதான் 

    மறுகிறிஸ்து என்பதும் அவரேதான் 

    அப்ப-இரசமதை மாற்றிடுவார் - அதை 

    கிறிஸ்துவின் ஊன்-உடல் ஆக்கிடுவார்.

பாவிக்குப் பொறுத்தல் அளித்திடுவார் 

நோயாளிக்கு ஆறுதல் அருளிடுவார் 

மாறையுரையாற்றி மக்களையே 

மன்னவனண்டையில் அழைத்திடுவார் . 

வேறு : 

    இறைபணி செய்து இன்னலகற்றி 

    இகமதில் வாழ்ந்து இறைவனைச் சேர  

    இறைமகன் இயேசு அழைக்கும்போது 

    இறங்கிடுவேன் அவர் பின்னாலே.

                                                    - ஜூன் 1979


இயேசுவுக்கு இசைத்தமிழ் 

இசைத்தமிழில் பாட வந்தேன் 

இயேசுவையே போற்றி நின்றேன் 

தித்திக்கும் சுதனின் பெயரில் 

தெய்வீக அழகைக் கண்டேன்.

    ஏழு சுரங்களால் உனை ஏற்றிடவே 

    ஏழை  எனக்கு அருள் புரிவாய் 

    தாளங்கள் ராகங்களால் உனைப் பாட 

    நான் வருவேன் உன்னிடத்தே.

இசை படைத்தாய் உன்னை ஏற்ற

இலக்கியம் படைத்தாய் உனைப்போற்ற 

காலை படைத்தாய் உனைக் காண 

எல்லாம் படைத்தாய் எமக்காக.

('முத்தமிழில் பாட வந்தேன்...' எனும் பாடலின் தழுவல் 1976)


மங்கள வார்த்தை...

வளன்தனை மனக்கவிருந்தனள் கன்னி 

மரியினை அணுகினன் ஆண்டவன் தூதன் 

'அருள் நிறை ' மரியென அழைத்தனன் அவளை 

'ஆண்டவர் உம்முடன்' எனவும் உரைத்தனன்.

    இதன் பொருள் எதுவென திகைக்கையிலேயே 

    'பயப்படவேண்டாம் பரமனின் கிருபை 

    பெற்றவள் நீ' யென மொழிந்தனன் தூதன்.

ஈவாய் இறைவனை இயேசு என அழைப்பாய் 

பெரியோர் அவனை உன்னதன் மகன் என்பர் 

    அவர்தம் தந்தை தாவீதின் அரியணை 

    அளிப்பார் ஆண்டவர் அவருக்கேதான் 

யாக்கோபின் வீட்டை என்றுமே ஆள்வார் 

அவர் அரசென்றும் முடிவடையாது.

    எப்படி நடக்கும், ஆணினை அறியேன் 

    என்றவள் கேட்க ஆண்டவன் தூதன் 

வருவார் ஆவி உன்மேல் எழுந்து 

தருவார் சக்தி விண்ணக வேந்தன் 

    உன்னிடம் பிறக்கும் தூயவர் அவரை 

    இறைமகன் என்றே அழைத்திடுவர்.

இதோ உம அடிமை ,  உம சித்தம் ஆக 

என்றனள் இவற்றை கேட்ட அக்கன்னி 

தூதினை அளித்த தூதன் மகிழ்வாள் 

இறைவனை நாடி மறைந்தனன் உடனே.

           [லூக்கா 1:26-38/ 08.07.1980]


சின்னப்பரின் மனம்திரும்புதல் . ..

குதிரைமீது கோபத்தோடு டமாஸ்கஸ் செல்கின்றான் 

கிறிஸ்தவரைக் கொன்றொடுக்க சாவூல் செல்கின்றான் 

வழியில்வைத்து ஒளியொன்று அவனைச் சூழவே 

விழுந்துவிட்டான் தரையினிலே தார்ஸூஸ் நகரத்தான் 

    சாவூல்,சாவூல் ஏன் எனக்கு துன்பம் கொடுக்கின்றாய்?

    என்ற சத்தம் கேட்டவனோ யார் நீர் என்றான் 

    நீ துன்புறுத்தும் இயேசு நானே என்ற ஆண்டவர் 

    எழுந்துடனே பட்டணம் செல் எனவும் அருளினார் 

    வேண்டியதை செய்யச்சொல்வேன் அங்கே வைத்தென்றார்.

கண்ணிருந்தும் காணவில்லை அவனெதுவும் அப்போது 

கைபிடித்து அழைத்து சென்றனர் நண்பர் அப்போது 

மூன்று நாட்கள் பார்வையில்லை புசிக்கவுமில்லை 

    ஆண்டவரின் ஏவுதலால் அனனியா வந்தனன் 

    நேர்த்தெருவில் யூதா வீட்டில் சாவூலைக் கண்டனன் 

    செபித்திருக்கும் சாவூல்மீது கைகள் வைத்தனன் 

    'பார்வை தந்து ஆவி தந்து' உனக்கருள் வழங்கவே 

    நீ வழியில் கண்ட இயேசு எனை அனுப்பினாரென்றான்.

பார்வை பெற்று ஞானஸ்நானவும் பெற்றவன் 

உணவருந்தி புத்துயிரும் பெற்றானப்போது 

உடனே சென்றான் உலகினற்கு எடுத்தியம்பவே

இயேசு தேவ மைந்தன் எனும் பேருண்மையை 

கேட்டவர்க்கு கேட்டவர்க்கு இது ஆச்சரியமே 

இறைவனுக்கு இயலாதது எதுவுமில்லையே.

    [திருத்தூதர் பணிகள்  9:1-19/ 09.07.1980]




 

No comments:

Post a Comment

John Rose’ Birthday – 01.07.2024 and Selva Rani...

 John Rose’ Birthday – 01.07.2024 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,  ஜாண்றோஸ் ! இன்றுபோல் என்றும் மன நிறைவோடு , உடல்-உள்ள நலத்தோடு வாழ்க , ...