அருள் வேண்டி...
எழுந்தருளே என்னகத்தே - எந்தன்
ஏழ்மையினை போக்கிடவே
வந்தருளே வையகத்தே - அதன்
வறுமைகளை விரட்டிடவே.
பாவத்தை பலமாக பகைத்திருந்தும்
பாவிகளை பரிவுடன் பார்ப்பவனே
மனம் நொந்து மன்னிப்பு பெற்றுவிட்டால்
மறுக்காமல் வருவாயே என்னகத்தில்.
வரவேண்டும் என்னகத்தில்
தரவேண்டும் அருட்கொடைகளையே
வரவேண்டும் அவனிதனில்
தரவேண்டும் அமைதிதனை.
02.12.1977
நண்பர் இயேசு...
எனக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரே இயேசு கிறிஸ்து
ஒன்றாக உழைப்போம் திராட்சை தோட்டத்தில்
இயேசுவின் தோட்டத்தில்.
உனக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரும் இயேசு கிறிஸ்து என்பதே
ஒன்றாக உழைப்போம் திராட்சை தோட்டத்தில்
இயேசுவின் தோட்டத்தில்.
நமக்கொரு நண்பர் அன்பு செய்பவர்
அவர் பெயரும் இயேசு கிறிஸ்துவே தான்
ஒன்றாக உழைப்போம் திராட்சை தோட்டத்தில்
இயேசுவின் தோட்டத்தில்.
நமக்கொரு அன்னை அன்பு செய்பவள்
அவளே இயேசுவின் தூய அன்னையாம்
ஒன்றாக உழைப்போம் திராட்சை தோட்டத்தில்
இயேசுவின் தோட்டத்தில்.
['I have a friend who loves me...' from 'Praise the Lord' - Charismatic Hymns - தழுவல் 25.02.1980]
தேவ அழைத்தல்
அழைத்ததும் வந்தேன்
ஆவலாய் தொடர்ந்தேன்
இறைபணி செய்ய
ஈங்கிதோ உள்ளேன்
உன்பதம் சேர்ந்தேன்
ஊழ்வினை மறந்தேன்
என் மனச்சுமையை
ஏற்பாய் இறைவா.
கொடுத்தவருக்கு கொடை
ஒப்புக்கொடுக்கின்றோம் நாங்கள் ஒன்றாய்
உம்திரு கொடைகளை விண்ணரசே
சிந்தனை வார்த்தைகள் செயல்களுடன்
உள்ளத்தெழும் உணர்ச்சியையும்.
பீடத்தண்டையில் ஒரு மனத்தோராய்
உன்னேக மகனின் பலியாக
நாங்கள் தரும் காணிக்கையை
மகிழ்வுடனே நீ ஏற்றிடுவாய்.
தியாகத்தின் வழியாக நாங்கள்வந்து
பலியிடும் தலத்தில் ஓன்று சேர்ந்தோம்
சிநேகத்தின் பல்லவி பாடி உன்னோ
டென்றும் இணைந்திட அருள் புரிவாய்.
[ബിഷപ്പ് കൊർണേലിയൂസിന്റെ 'കാഴ്ച വയ്ക്കുന്നിതാ...' தழுவல் - ஜூலை 1977]
உள்ளத்தை கடந்தவன்
உலகில் உறையும் இறையே -என்
உள்ளத்தில் நிறையும் உருவே
உனையன்றி உலவிவரும் - என்
உயிரென்ன உயிரோ!
உள்ளத்தைக் கடந்தவன் நீ - என்
உயிராக இருப்பவனும் நீ
உண்மையெல்லாம் நீ
உன்னையன்றி ஊமையே யான்.
உறங்கும்போதும் உணர்ந்திருப்பவன் நீ
உறைந்த உடலுக்கும் உயிரளிப்பவன் நீ.
[திருமலை, நாகர்கோவில்/ 22.08.1990]
No comments:
Post a Comment