அன்னையின் ஆதரவுக்காக . ..
அம்மா பாவத்தால் என் ஆன்மா
அழிந்து விடுமென்றஞ்சுகிறேன்
தாபம் நிறைந்தே நான் உன்னை
அண்டி வருகிறேன் ஆதரி நீ.
நேசத்தாயே இறை மகனை
எமக்கு ஈன்று தந்தாயே
வேந்தனை ஈன்று தந்தமையால்
மாந்தரின் மாதா ஆனாயே.
மதுரமும் சாந்தமும் நிறைந்தவளே
மானிடர் எம்மை ஏற்றருளே
கிருபை தயாபம் உடையவளே
கிறிஸ்துவோடெம்மை சேர்த்தருளே.
['கடவுளின் பிரதிநிதி', செப்டெம்பர் 1977, எண்.260]
பரலோக தாகம்
என்று தணியும் இந்த பரலோக தாகம்?
என்று மடியும் எங்கள் பாவத்தின் மோகம்?
என்றெமது பாவக் கறைகள் மறையும்?
என்றெம தின்னல்கள் தீர்ந்து பொய்யாகும்?
அன்றொரு மீட்பைத் தர வந்தவளே
கிறிஸ்தவ வாழ்வை ஆதரிப்பவளே
மோட்சம் தருந்துணை நின்னருளன்றோ
மெய்யடியோர் இன்னும் வாடுதல் நன்றோ ?
பாவமும் சாவும் நின்னடியார்க்கோ
சாவினில் உயிர்ப்பு வேறினியார்க்கோ
தஞ்சமடைந்தபின் கைவிடலாமோ
தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப்போமோ?
அஞ்சலென்றருள் செயுங் கடமையில்லாயோ
தாயே , நீயும் நின்னறம் மறந்தாயோ
வஞ்சகப் பேயின் தலை நெரிப்பாயே
பிதாவின் மகளே, சுதனின் தாயே.
['என்று தணியும் இந்த சுதந்திர தாகம்' எனும் பாரதியின் கவிதை தழுவல் . ..
'கடவுளின் பிரதிநிதி', ஆகஸ்ட் 1978, எண்.271]
இயேசுவுக்கு அர்ப்பணம்
இதயக் கோவிலில் எழுந்து வா - என்
இதய வீணையை மீட்ட வா
இன்னல் அனைத்தும் நீக்க வா
இன்பச் சுடரை ஏற்ற வா.
அமைதியின்றி அலைகின்றேன்
அழிவை நோக்கி செல்கின்றேன்
அடைக்கலம் ஒன்றே கேட்கின்றேன்
அடியேன் எனையே தருகின்றேன் .
ஏழை எனையே ஏற்றிடுவாய் - என்
ஏழ்மை தனையே மாற்றிடுவாய்
ஏற்றம் பெற்றிட செய்திடுவாய் -என்
இயேசுவே எழுந்து வந்திடுவாய் .
25.02.1980
இயேசு அளிக்கும் ஆனந்தம்
ஆனந்தம் பேரானந்தம் - என்
அகமெலாம் அருளானந்தம்
இதயத்தில் எழுந்தவர் -என்
இயேசுவாதலால் இவ்வானந்தம் .
தகுதி இல்லாத என்னகம் எழுந்து
தந்தார் எனக்கும் ஆனந்தம்
கிடைப்பதற்கரிய இவ்வானந்தம்
அளித்தவர் அவரை ஆராதிப்போம்.
என்னையே மாற்றி இறைமகனாக்கிட
தன்னையே தந்தார் இறைவனவர்
அவர் பதம் பணிந்து - சரண்
அடைவோமெனில் மீட்படைவோம் .
-10.02.1980
குருத்துவக் காணிக்கை
ஏற்பாய் இறைவா எனை இன்றே
உம் திரு மகனைப் போல் என்றும்
பலியிடும் குருவும் பலிப்பொருளாகவும்
மாற்றிட வளர்த்திட . ..
எப்ப இரசத்துடன் என் தாய் தந்தை
தம்பி தங்கையையும் அளிக்கின்றேன்
உற்றார் உறவினர் நண்பருடன்
இப்பங்கையும் உமக்களிக்கின்றேன்.
இந்நிலைக்கென்னை சேர்த்திட உதவிய
அத்தனை பேரையும் நினைக்கின்றேன்
ஆசீர்வதித்து அருட்கொடை வழங்கிட
அனைவருக்காகவும் செபிக்கின்றேன் .
['സ്വീകരിക്കു, സ്വീകരിക്കു...' எனும் மலையாள பாடலின் தழுவல் - எனது 'திருநிலைப்பாடுக்காக எழுதப்பட்டது . .. 06-02.1980]
No comments:
Post a Comment