Thursday, September 19, 2024

உ. காதல்...

 உ. காதல்... 

1. 60) நீயிருக்க என் இதயம் நிம்மதியளிக்கும் 

நீயின்றேல் அவ்விதயம் அமைதியிழக்கும் 

நிலையில்லா கடல்போல் ஆழமதடையும் 

நீயின்றி ஆழம் கூட வெறுமையென்றிருக்கும்.

    வெறுமையாதே வேகமுள்ள புயலாய் மாறும் 

    வேறென்ன என் மனதின் நிலையென்றாகும் 

    வேண்டாமிந்த வெறுமைநிலை என்னகத்தே 

    வேகமாக வரும் புயலை தடுத்திடவேணும் . 

புயல்வேண்டாம் பூந்தென்றல் அதுவே போதும் 

பூங்காற்றாய் நீ மட்டும் இருந்தால் போதும் 

புவியெல்லாம் நீ வீச பூரிப்படையும் - வரும் 

புகழெல்லாம் உன்னாலே ,  புவியதை உணரும்.

                                        - எர்ணாகுளம் 22.08.1991


2. 61) உன் சந்நதியில் உவகை கொள்ளும் என்னிதயம் 

உனைக்காண உருவமில்லா துயரடையும் 

உறவாலே நிறைவெய்தும் என்னுள்ளம் 

உனையின்றி எந்நாளும் கலக்கம் கொள்ளும்.

    நான் மட்டும் சரி பாதி நீயன்றோ மறுபாதி 

    நாமிருவர் சேர்ந்தாலே நலன் கோடி 

    நீயின்றி நான் தவிக்க விடலாமோ 

    நலமாக நீ வருவாய் என்னை நாடி.

நிலவுமகள் வான்வெளியில் தவழ்ந்து வர 

நீர்மகனும் அதைக்காண பொங்கி எழ 

அதுபோல உன் வரவை எதிர்நோக்கும் 

ஆண் மகனாம் என் நிலையைப் பாராயோ.

    பார்வையொன்றே பரிசாக தந்தாள் போதும் 

    பாவியிவன் பன்மடங்கு பூரிப்படைவேன் 

    பாவையுந்தன் பற்க்காட்டி சிரித்தால் போதும் 

    பரவசமாம் பரிசதென ஏற்றுக்கொள்வேன்.

                                             - எர்ணாகுளம் 21.08.1991


3. 62) இருகோடுகள் இணையாமல் சென்றால்தானே 

இரயில் ஓடும் இருப்புப் பாதை அதுவென்றாகும் 

அதுபோல நாமிருவர் இணையாதிருந்தால் 

அதுவன்றோ அழகுமிகு காதலென்றாகும்.

    இரயில் ஓட அஃதோடு என் மனமும் ஓட 

   இலட்சியமோ அடையாமல் நான் பாட 

    இலக்கியத்தில் காண்கின்ற காதல் கூட 

    இலட்சியக் காதலரென நமைக் கொண்டாட.

இலக்கியமாய் நம் காதல் இன்னும் வளர 

இதயத்தில் உனை நாளும் நானும் கொணர

இலக்கணமாய் காதலுக்கு நீயமைய 

இலட்சியக் காதல் அதுவென்றாகும்.

                                          - இரயில் காதல் 20.08.1991


4. 63) வெறுமையாக இருந்த உள்ளம் 

வெகுண்டெழுந்த தென்ன வென்று

வெளியுலகோர் கேட்க நன்று 

வெட்கி நின்றேன் நான் அன்று.

    வேண்டாத உறவுகளும் 

    விபரீத சிந்தைகளும்

    வேடிக்கையாக வந்து 

    வேதனையை தந்ததின்று 

வேடனவன் வலை போட்டு 

வேட்டை மானை தேடுதல்போல் 

வேகமுள்ள மனமின்று 

வேறெதையோ  தேடுதின்று.

    வேடமது கலைந்த பின்பு 

    வேறென்ன விளைவு வரும் 

    வேதனைகள் தொடர்ந்து வரும் 

    வேகம்கூட குறைந்து வரும்.

                    - இரயில் பயணங்களில் - 20.08.1991



  


No comments:

Post a Comment

John Rose’ Birthday – 01.07.2024 and Selva Rani...

 John Rose’ Birthday – 01.07.2024 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,  ஜாண்றோஸ் ! இன்றுபோல் என்றும் மன நிறைவோடு , உடல்-உள்ள நலத்தோடு வாழ்க , ...