ஈ. 22. 56) தாய்மைக்கு தாராட்டு
என்னை ஈன்ற அன்னை
எழிலான அன்னை
தியாகச் சுடர் வீசும்
திருவான அன்னை.
நினைவுள்ள நாளெல்லாம் நீங்காத துன்பம்
நித்தமும் நின் கண்ணில் நிலையான துயரம்
நிமித்தமாய் நின்றவர் நிலையில்லா தந்தை
நிழல்போல நின்றாயே நீங்காமல் எம்மை.
பசியோடு நீயிருந்தும் பசி தீர்த்தாய் எமக்கு
படிக்காத மீ மட்டும் படிக்கவைத்தாய் எம்மை
பக்தியுடன் பரமன் சந்நதி தேடிடவும் செய்தாய்
பார்ப்பவர்க்கு மாதிரியாய் வாழ்ந்திடவும் செய்தாய்.
வாழ்வுக்கு வழியின்றி வந்தபோதெல்லாம்
வேலை செய்து பழகாத வெளியினிலும் போகாத நீ
வலை முடித்து விலை பெற்று வாழச் செய்தாய்
வழக்கமாக விழித்திருந்தும் வலை நெய்தாய்.
அலங்காரம் அணிகலன்கள் ஒருத்திருந்தாய் என்றும்
ஆடைகூட அழகின்றி அடக்கமாக அணிந்தாய்
ஆண்டவரை அடைக்கலமாய் அணிகலனாய் கண்டாய்
ஆறுதலும் ஆனந்தமும் அதிலிருந்தே யடைந்தாய்.
உன் மக்களின்று மழலை பெற்று மகிழ்ந்திருக்கும்போது
உனக்கு மட்டும் மகிழ்ச்சி வேண்டாமென்றிருப்பதேனோ
உவப்புடனே நீ வளர்த்த தலைமகனும் உனைத்தொடர்ந்து
உலகவாழ்க்கை வேண்டாமென்று தள்ளிவிட்டான் போலும்.
ஊரறியாமல் உலகறியாமல் உத்தமியாய் வாழ்கின்றாய்
மங்கையர்க்கு மாதிரியாய் பெண்மைக்கு பெருமை சேர்க்கின்றாய்.
தாய்மைக்கு தகைசான்ற தத்துவமாய் திகழ்கின்றாய்
தவம் செய்தால் கிடைக்காத தனிப்புகழை அடைகின்றாய்.
- குரிசுமலை - 21.09.1990
23. 57) பாகவதர் அப்பா
கலையுள்ளம் கொண்டவர் அப்பா
கடமைகளை பொருட்படுத்தாதவர் அப்பா
கண்டபடி நடந்தாரன்றி - குடும்பம்
கவனித்து நடக்கவில்லை யப்பா.
மனத்தால் மக்களை அன்பு செய்தாரெனினும்
மற்றபடி மறந்தே வாழ்ந்தார்
மனம்போல மகிழ்ந்து வாழ - மயக்கும்
மதுவையே மதமாகக் கொண்டார்.
திரவியம் தேட தெரிந்தவர் அப்பா
தேடிய செல்வம் ஆடி அழித்தாரப்பா
பசிக்கும் மக்களை பதறும் மனைவியைப்
பாராமல் பலவாறு நடந்தார் .
மனைவியை மனதால் மதித்தார் அப்பா
மக்களை மகிழவும் செய்தாரப்பா
அவர்களுக்காக ஆடை அணிகலன்
அவ்வப்போது கொணர்ந்தாரப்பா.
மக்கள் உயர்வில் பெருமிதம் அடைவார்
மதிப்புடன் வாழ மறுத்தும் விடுவார்
மாதா பக்தியை மணமுடன் ஏற்றார்
மதத்தின் ஒழுக்கம் மற்றவர்க்கென்பார்.
நடிப்பும் பாட்டும் தெரிந்தவர் அப்பா
நாடக மேடையில் நாயகனப்பா
பாட்டின் பரவசம் பகிர்ந்தவராதலால்
'பாகவதரெ'ன பாராட்டும் பெற்றார் .
'தந்தை சொல் மிக்க மந்திரமில்லை' எனும்
தமிழ் மூதுரையை தலைமேற்கொண்டோம்
'தந்தையின் வழியே மைந்தனும்' என்ற
பழமொழியை ஏற்க தயங்கிய நின்றோம்.
- குரிசுமலை -22.09.1990
24. 58) 'அண்ணா என்றழைத்த நாவால்...'
அடுத்தவர்கள் கேலி செய்தும்
அன்புடனேயே அழைத்தாயே
அருமைத் தங்கை நீயே.
உடன் பிறவாதிருந்த பின்னும்
உரிமையுடன் அண்ணா என்றாய்
உனை நானும் தங்கையெனும்
உறவுடனே ஏற்றுக்கொண்டேன்.
விருப்பம் வரை நீயும்
உரிமையுடன் அண்ணா யென
அழைக்கும் சுதந்திரமுண்டு
அனுமதி அதற்கேன் வேண்டும்.
- 30.11.1991
25. 59) உறவுக்காக ஏங்கும் உள்ளம்
துறவை எண்ணி தயங்கும் எண்ணம்
குறையை நினைந்து கலங்கும் நெஞ்சம்
நிறையை நோக்கி நீங்கும் கொஞ்சம்.
பறவையெனவே பறந்திட விழையும்
இறகுகள் இன்றி சீற்றம் கொள்ளும்
பாய்மரம்போல பாய்ந்திட துடிக்கும்
பாய் விரியாது பதட்டம் அடையும்.
இப்படி பலவித மனநிலையோடு
இருக்கும் எனக்கு இன்பம் சேர்க்க
இறைவன் தந்த இளையவள் நீயே
இன்னொரு தங்கை நீயென ஏற்றேன்.
உறவுகள் பலது ஊடலும் சிலது
உண்ணுறவதிலோ ஊடலும் அரிது
உண்மையை நானே அறிவது எளிது
உலகமோ உன்னை புரிந்துகொள்ளாது.
இருந்தும் என்னை தேற்றிட வந்தாய்
இதயத்தன்மையை இயல்பாய் கண்டாய்
இலகுவாய் எனையே நீயும் வென்றாய்
இயைந்தே உனக்கே பணிந்திட செய்தாய்.
இதற்கென நானும் இறைமகன் இயேசுவை
இடைவிடாதழைத்து இறையருள் வேண்டுவேன்...
- 06.11.1991
No comments:
Post a Comment