Thursday, September 19, 2024

ஈ. 16. கவிதை முத்தம்

 ஈ. 16. கவிதை முத்தம் 

மூன்றாண்டு முடியும் இன்று - சென்ற 

இரண்டாண்டும் போல் நன்று 

எழுதவேணும் கவிதை ஓன்று - இன்று 

கவிப்பாலோ சுரந்ததன்று.

    முன்னவன் முன் முறையிட்டேன் 

    முறையாக முயன்றும் வந்தேன் 

    முத்தமிழோ முன்வந்து - கவிதை 

    முத்தமொன்று தந்து சென்றாள்.

தமிழ் தந்த கவிதை முத்தம் - என் 

தங்கை மகள் பெற வேண்டும் 

பிறந்தநாள் பரிசாக - அதை 

பிரியமுடன் ஏற்றிடுவாய்.

                     - 16.03.1987


17. தரம் குறையும் உறவு 

தவழ்ந்துவரும் தமிழ் இன்று தயங்கி நிற்க 

தவறாத நினைவுகளோ தவறி வர 

தம்பி மகள் தரும் உறவும் தரம் குறைய 

தவிப்பதுவோ தந்தைபோல் ஓர் உள்ளம்.

    உறவுக்கு உயிர் வேண்டும் - அன்றேல் 

    உறைந்துபோகும் உறவு கூட 

    உறைந்த பின்பு உருக வேண்டின் 

    உள்ள நிலை மாறவேண்டும் . 

                          - 13.11.1987


18. பாலைவனச் சோலை

பிறந்தநாள் வாழ்த்துடன் - நீ 

பறந்துசெல்லப் போகின்றாய்  

மறந்திடுவாயோ மாமாவை 

சிறந்த என் செல்வக் குன்றே.

    பரந்த இவ்வுலகில் உன்னை 

    பண்பாக வளர்த்திடவே 

    பழுவொன்றும் பாராமல் 

    பணி செய்யும் அப்பாவை 

    பார்க்கத்தான் போகின்றாய்.

பாலைவனச்சோலை நீ அப்பாவுக்கு 

நீயென்றேல் பாலைவனம் இப்பாவிக்கு

பாலைவனம் பசுமையாக்க நீ வருவாய் 

பாசத்தின் உருவான அமுதாக்கண்ணே.

                         -21.03.1988


19. பெண்மையின் பெருமை 

அன்பில் வளர்ந்த மகள்  

ஐயம் தெளிந்த மக்கள் 

அறிவைத்தேடி வரும் 

ஐந்தாவது பிறந்தநாள்.

    அமுதாக சுவை தந்த கண் நீ - இனி 

    அறிவாக சுடர் விடுவாய் 

    அனைவரையும் அன்பு செய்து 

    அகிலத்தை அரவணைப்பாய்.

பொன்னுக்கும் பொருளுக்கும் பொருளில்லை 

மனிதத்தன்மைக்கே மாண்புண்டு - அத் 

தன்மையில் பெண்மைக்கும் பங்குண்டு 

மறந்திடாமல் வாழ்ந்திடுவாய் அவ்விதமே.

                                         - 21.03.89


20. முக்கனிகள் 

முதற் கனியோ ஒரு கனி 

அக்கனியே தனிக்கனி 

அமுதெனவே பெயர்கொண்டு 

அருஞ்சுவை தந்த தமிழ்க்கனி.

    தனிக்கனியாம் தமிழ்க் கனிக்கு

    தங்கையராக இரு கனிகள் 

    முத்தமிழ்போல் மூவருமே 

    முறையாக செழித்திடுவீர்.

இயல் இசை நாடகம் போல் 

இனிதே வாழ்ந்து இறைவனுக்கும் 

இதர மனிதருக்கும் இன்பமாக 

இன்னல் நீக்கி வாழ்ந்திடுவீர்.

    'பெண் பிறந்த வீடெ'ன்ற சொல்லுண்டு 

    என்பதனை தவறென்று காட்டவேண்டும் 

    பெண்மைக்கும் பெருமையுண்டு என்பதனை 

    பாருக்கு பறைசாற்றி வாழ்ந்திடுவீர்.

                                   - 06.04.1989 


21. இவன் தந்தை என்னோற்றான் 

பிறந்ததெல்லாம் பெண்ணென்று வருந்தவில்லை - இனி 

பிறப்பதுவே ஆணானால் போதுமென்றோம் 

பிறந்துவிட்டான் பிள்ளையவன் தம்பிக்கு 

தரமான தங்கம் போல் தவழ்ந்து வந்தான்.

    தங்கம்போல் தனிச்சிறப்பு அடையவேண்டும் 

    தலை நிமிர்ந்து தமிழனாக வாழவேண்டும் 

    தகைசான்ற பெரியோரை மதிக்கவேண்டும் 

    தகாத செயல்களையே தவிர்க்கவேண்டும்.

வலிமை மிக்க வாலிபனாய் வளரவேண்டும் 

ஈரமுள்ள இளைஞனாக இருக்கவேண்டும் 

அச்சமற்ற ஆண்மகனாய் திகழவேண்டும் 

ஆண்டவரை எக்கணமும் போற்றவேண்டும்.

    அழிந்துபோகும் செவத்தை தேடவேண்டாம் 

    அழியாத செல்வமான அறிவை தேடவேண்டும் 

    ஆங்காரம் அக்கிரமம் ஒருநாளும் வேண்டாம் 

    அனைவரையும் எந்நாளும் மதிக்கவேண்டும்.

உன்னுயர் வாழ்வை காண்பவர்கள் 

'இவன் தந்தை என்னோற்றான்' 

என கேட்கவேண்டும் - தாயும் 

ஈன்றபொழுதிற் பெரிதுவக்க வேண்டும்.

                              - குரிசுமலை - 19.09.1990

No comments:

Post a Comment

John Rose’ Birthday – 01.07.2024 and Selva Rani...

 John Rose’ Birthday – 01.07.2024 இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ,  ஜாண்றோஸ் ! இன்றுபோல் என்றும் மன நிறைவோடு , உடல்-உள்ள நலத்தோடு வாழ்க , ...