ஈ. 6 தமிழுக்கன்று, தங்கைக்கென்று
தமிழுக்கே தலைமையிடம் - என்
தங்கைக்கோ தனியோரிடம்.
தமிழுக்குத் தரமறுத்த தனியிடத்தை
தங்கைக்கு தந்துவிட்டேன் என்னிதயத்திலே.
தமிழ் பிறந்து தரணியெல்லாம் தழைத்திருக்க - என்
தங்கை மட்டும் ஏன் இன்னும் தழைக்கவில்லை
அவள் தழைக்க தலைமையிடம்தான் வேண்டின்
அளித்திடுவேன் அவ்விடம் என் தங்கைக்கின்று.
உனக்கென்று வாழ்த்தெழுத நினைக்கும்போது
கவிதை ஊற்று பெருக்கெடுத்து பாய்கிறதே
அக்கவிதையினால் அபிஷேகம் செய்துன்னை
மகிழச்செய்வேன் உன் பிறந்தநாளின்று.
பணமல்ல , பரிசல்ல , பாசம் மட்டும் போதுமென்றாய்
பாசத்தை பாய்ச்சிடுவேன் உன் உளவயலில்
பயிராக விளைந்திடும் பண்பை நானே
பலர்காண பார் புகழ பறித்திடுவேன் .
5.6.1982
7. தம்பியை நம்பி
தம்பியை நம்பி நானே
தரணியை மறந்தேவிட்டேன்
தவறல்ல அதுவெனக் கண்டேன்
தரணிக்கு நிகர் தம்பி நின்றதால்.
தரணியெலாம் தயங்கினாலும்
தயக்கமில்லை தம்பியுளதால்
தாங்கிநிற்பான் தரணிபோல
தன்மீது நம்பிக்கை வைப்போரை .
தள்ளாடும் தாய் தந்தை
தளிர்த்துவரும் தங்கை கூட
தம்பி உன்னை நம்புகின்றார்
தளராமல் தங்கிடுவாய்.
தழுவிவிட்ட துறவறத்தை - இறை
தாள் பதம் சேர்ந்து நடத்திச்செல்ல
தம்பியுந்தன் உதவி தேவை
தந்திடுவாய் எந்தனுக்கதை.
துன்பமெல்லாம் தாங்குவதேன் தம்பிமட்டும்
துணை நின்று தூக்கிவிட துணிந்துவிட்டேன்
துணை நின்றாலென் துறவறம் துயர்படுமா
துயர்நீக்க துறவறத்தை துறக்க நேருமா?
- 1.7.1982
8. அமுதா
தமிழுக்கு அமுதென்று பேர் - என்
தங்கைக்கும் அதுவன்றோ பேர்
அவள் குழந்தையும் அதுவென்றே சொல்
'அமுதா ' வென்றழைப்போமே கேள்.
அமுதாவை தாராட்ட யார் - அவள்
அன்னையின் அண்ணன்மார் யாம்.
மே, 1984
9. தங்கை தந்த தவப்புதல்வி
அமுதம் போன்றொரு அன்பினை ஈன்றாள்
ஆருயிர்த் தங்கை அளவிலா மகிழ்ச்சி கொண்டாள்
இன்பம் எங்கள் இல்லத்திற்கீன்ற
ஈசனுக்கு நன்றி நன்றி நன்றி கோடி.
உறவுக்கு உரை சொன்ன தங்கை
ஊடலுக்கு உயிர் கொடுத்த மங்கை
எழிலானதோர் மகளைப் பெற்று - எமது
ஏக்கத்தை தீர்த்து வைத்தாள்.
ஐயா, உந்தன் அடிமையிவள்
ஒருநாளும் கவலையின்றி வாழ்ந்திடவே
ஓராயிரம் முறை வேண்டுகிறேன் நான்
ஒளடதம்போல் காத்திடய்யா காலமெல்லாம் .
- 29.06.1984
10. ரோஜா மணம்
அழகிய ரோஜா மலருடன் கூடிய
அதிசயமான பெயர் கொண்டோரே
அப்படியென்றும் ரோஜாக்கள் போல்
அழகழகாக வாழ்ந்திடுவீரே.
மலரின் மணமும் மயக்கும் மதுவும்
வண்டினை என்றும் ஈர்ப்பது போல
கணவனின் கருத்தினை கவர்ந்திட நீயும்
கண்ணியமாக நடந்திடல் வேணும்.
மனையின் மாண்பை மற்றவர் போற்ற
இல்லறமென்பதை நல்லறமாக்கு
உழைப்பால் உயர்ந்து உத்தமனாகி
உன்துணைக்கென்றும் உறுதுணையாவாய்.
மழலை பெற்று மகிழ்ந்திடும் வேளை
மற்றவரையும் மறந்திடல் வேண்டாம்
உற்றார் உறவினர் ஊரார்தனையும்
உதவி செய்து உயர்த்திடல் வேண்டும்.
வாழ்க்கைப் படகு வழி தவறாமல்
கரையை அடைய கலங்கரை விளக்காய்
கர்த்தர் உங்களை காத்திட என்றும்
கருத்தாய் வேண்டுதல் என் கடனன்றோ.
-23.01.1985
11. தம்பி தந்த தாக்கம்
ஏழைகள்தான் என்றாலும் - நாங்கள்
கோழைகள் ஆனதில்லை ஒருபோதும்
எங்களுடன் பிறந்திருந்தும் - நீ
கோழையாக இருந்ததனால்.
பணம் என்றும் இருந்ததில்லை - பதிலாக
பண்பதனை வைத்திருந்தோம் பலமாக
பண்பற்ற பாவியாக பணிந்துவிட்டாய்
பாசத்தை பலிகொடுத்து சென்றுவிட்டாய்
பாதகனாய் மாறியதால்.
ஏழைகள் எண்கள் குடும்பத்தை என்றாவது
ஏற்றம் பெற்றிட செய்திடுவாய் என்றிருந்தோம்
ஏமாறச் செய்ததன்றி ஏங்கவும் வைத்தாய்
ஏக்கமின்னும் ஏறுவதன்றி இறங்கவில்லை
இரக்கமில்லா உன் செயலால்.
என்ன முடிவெடுத்தாலும் ஏற்றிடுவேன் என்றபோதும்
உனைக்கலந்தாலோசித்தோம் உறுதிக்காக
உறுதியான முடிவுனது என்ற பின்னும் - ஏனோ அதை
உரமில்லா உள்ளத்தால் உதைத்துவிட்டாய்
உண்மையற்றவனாய் மாறியதால்.
26.01.1985
No comments:
Post a Comment