உ. 5. 64) நட்பை நாடி நான் வந்தேன் - நல்
வாழ்த்தைக் கூறி உனைப் புகழ்ந்தேன்
நாநிலம் சிறந்து நீயும் வளர - நம்
நாயகன் இயேசுவை வேண்டி வந்தேன்
நலம் நிறை எண்ணம் நச்செனக் கொண்டாய்
நன்றென செய்ததை தீதெனக் கொண்டாய்
சிந்தையிற் தோன்றிய சீரான நினைவை
சீர்கெட்டதென்று சீற்றம் கொண்டாய்.
சிலவேளை நீயே இப்படியாக - என்
சிந்தையும் கலக்கம் கொள்வதைப் பாராய்
உள்ளத்தைப் புரியாதுணர்வை இழக்கும்
உனக்கெனக் கூற எனக்கென உண்டு .
- 12.08.1991
6. 65) தூசுபடிந்த என் இதய வீணையை
துடிக்க வந்தவள் நீ
துருப்பிடித்த அதன் நரம்புகளை
துலங்க வைத்தவள் நீ
தூங்கிக் கிடந்த என் இதய ராகத்தை
துயிலெழச் செய்தவளும் நீயே.
துறவுக்காக உறவை முறித்த என்னை
உறவைச்சொல்லி துறவை துரத்திவிட
தூண்டுபவளும் நீயன்றோ.
மணமதைத் துறந்தேன் - என்
மனமதை நிறைத்தேன்
மன்னவன் தனது மாசறு மொழியால்
மாதே உந்தன் மயக்கும் விழியால்.
மயங்கிய மனதின் மருந்தென நீயும்
மறுபடி வந்தெனை உணர்த்திவிடு
மணமதைத் தந்து மகிழ்வுறச்செய்யும்
மலர்போல் உன்னை தந்துவிடு.
- 12.08.1991
7. 66) உள்ளத்தை வென்றவன் நீ
உணர்வாக நின்றவள் நீ
ஆசையை வளர்த்தவள்
ஆண்மையை தொட்டவள்
காதல் திருமகள் நீ.
- 10.08.1991
8.67) அன்றொரு நாள் பெண்ணொருத்தி
ஆசைகொள்ள ஆசைப்பட்டாள்
இயலவில்லை இன்றுவரை
ஈங்கிதோ நீயொருத்தி
உனையளித்து உறவுகொள்ள
ஊடலுடன் முனைகின்றாய்
என் பொருட்டு ஏங்கும் நீயோ
ஏமாற்றம் அடைவாயோ
ஐயமுறக் கேட்கின்றேன்
ஒருவேளை உன்னை நாடி
ஓடோடி வந்தாலும்
ஒளடதமாய் சுவைக்காதோ?
- 09.08.1991
9.68) காலங்கள் கடந்த போதும்
கருத்தினில் நிறைந்தவள் நீ
கடமை செய்ய விட்டுவிட்டு
கடந்து சென்றவள் நீ.
கடந்தபின் உனைக் கண்டபோது
கவலையாக தோன்றினையே.
10. 69) உறவென்று சொல்லி வந்து - பின்
ஊடல் ஏன் புரிய வேண்டும்
உத்தமிபோல் காட்டிவிட்டு - நீ
உறவை ஏன் முறிக்க வேண்டும்.
பெண்ணென்று ஆனாலே - அது
பெரும் பிழையாய் ஆவதென்ன
பேதை மனம் இருந்துவிட்டால்
பெரும்பூசல் பெயர்ந்து வரும்.
11. 70) முல்லைமலர் பற்க் காட்டி - நீ
முகமலர்ந்து சிரித்திடவே
முத்துக்கள் சிதறுவதாய் - தவ
முனிவர்கூட நினைப்பனரே.
முகம் நிறைய கௌரவமாய் -
முறையின்றி போவதென்ன
முன்கோபம் போல் காட்டி - நீ
மூடி மறைப்பதென்ன.
'சாவைவிட வலுவாமே காதலென்று'
சங்கீர்த்தனம் கூட சாற்றும்போது
சாதாரணப் பெண்ணொருத்தி
சாதிக்க முயல்வதென்ன.
சாவுக்கே சவால் விடும் காதலுக்கு
சரிநிகராய் நீயிருக்க விருப்பமெனில்
சாகசங்கள் புரியவேண்டும் - இன்னும்
சாபம்கூட ஏற்கவேண்டும்.
[இனிமைமிகு பாடல் 8:6]
- 01.08.1991
12. 71) காதல் பற்றும் கடவுள் பற்றே
கடிதம்போல் வந்ததென்ன
கவனத்தை கவர்ந்ததென்ன
காதல்கொண்ட கள்ள உள்ளம்
கலையுள்ள கருணை யுள்ளம்.
கவிதையொன்று பாடிவிட்டேன்
கருத்தறியக் காத்திருந்தேன்
கருத்தெனவே கடிதமொன்று
கண்டபோதோ கலங்கி நின்றேன்.
கடவுள் பற்றே பக்தி என்பர்
காதல் பற்றோ காமமென்பர்
காதல் பற்றும் கடவுள் பற்றென
கொண்டதனால் காதல் கொண்டேன்.
என் போன்ற ஒருவனுக்கு
ஏன் இந்த காதல் இன்பம்
காதல்கொண்ட நீ இந்த
கருத்தினையே ஏற்பாயா?
- 29.07.1991
13.72) உனக்கு மட்டும்
கண்டதும் காதல் கொண்ட எனை - உன்
கண்களும் காந்தமாக கவர்ந்திடவே
கவிதையொன்று பாடி உன்னை - என்
காதல் மனம் காட்ட வந்தேன்.
உனைக்காண உதவிபோல கேட்டு வந்தேன்
கேட்டபவற்றை கேட்டபடி தந்து வந்தாய்
உதவிக்கு உளம் மகிழ்ந்து நன்றி சொல்ல
உனக்கென்று கவிதையொன்று பாடுகின்றாய்.
உன் கண்ணிருக்க கவிதையெல்லாம் வீணே
நீயருகிருக்க கலையழகொன்றும் காணேன்
உன் குரலென்றும் இசை போன்ற பண்ணே
நீ நடந்துவர நடனம்கூட பாரேன்.
இப்படியும் இன்ப நிலை எய்திடவே - என்
இதயமது இனி யுன்னைக் கெஞ்சும்
இந்நிலைக்கு எனைக்கொணர்ந்த தேவி
இவ்வுதவி தந்தெனக்கு அருள்புரிக கொஞ்சம்.
காவியங்கள் பல்வேறு பாடக்கேட்டேன் - இன்னும்
ஓவியங்கள் வண்ண வண்ண எழிலில் கண்டேன்
என்றிருந்தும் உன்போன்ற காவியமோ ஓவியமோ
எங்கணுமே கேட்டதில்லை கண்டதில்லை கண்ணே.
நீ சிரித்தால் முத்துதிரப் பார்த்தேன்
நீ சினந்தால் சத்துதிர உணர்வேன்
நீ மொழிந்தால் இனிப்பதென சுவைப்பேன்
நீ இழந்தால் கசப்பதென உணர்வேன்.
நீ வாழ நித்தமும் யான் வேண்டுகிறேன்
நிலையான புகழ் உனக்கு வாழ்த்துகிறேன்
நீங்காத இன்பம் நிழல்போல தொடர
நிகரில்லா தலைவனையே வேண்டுகிறேன்.
- 09.07.1991
14. 73)
No comments:
Post a Comment